மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம்
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்றோடு நிறுத்தப்பட்டன. 78 பேரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு அதிகாரிகள், மாநில அரசு மற்றும் கிராம மக்களுக்கு இடையே நடந்த கூட்டத்திற்குப் பிறகு மீட்புப் பணிகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மீட்கப்பட்ட கடைசி உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், இதற்கு மேல் மீட்பு பணிகளை தொடர்ந்தும் எந்த பயனும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இர்சல்வாடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அறிவித்த மாநில அரசு
அடையாளம் காணப்படாத உடல்கள் மற்றும் விலங்குகள் அழுகி கொண்டே இருப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள காலாபூர் தாலுகாவுக்கு உட்பட்ட மலைச் சரிவில் அமைந்துள்ள இந்த பழங்குடியின கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமம் மலையின் உச்சியில் அமைந்துள்ளதால், மீட்புக் குழுவினர் அந்தப் பகுதியை அடைய மணிக்கணக்கில் மலையேற வேண்டியிருந்தது. அப்பகுதியில் பெய்த கனமழையால், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் மீட்பு பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 27ஆக உள்ளது. இருப்பினும், 78-பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையில், நிலச்சரிவில் வீடுகளை இழந்த இர்சல்வாடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.