மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 9) காலை 8 மணி முதல் நடைபெறுகிறது. அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்ததால் காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் ஆளும் கட்சியான த.வெ.க, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே பலமுனைப் போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்கள்
பலப்பரீட்சையில் பிரதான வேட்பாளர்கள்
மதுராந்தகம் (27 வேட்பாளர்கள்): த.வெ.க சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தாராபுரம் (22 வேட்பாளர்கள்): த.வெ.க சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி போட்டியிடுகின்றனர்.
தட்டாஞ்சாவடி (11 வேட்பாளர்கள்): புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ததால் காலியான இத்தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேதுசெல்வம் போட்டியிடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள்
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
மொத்தம் 500 ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் 23 சுற்றுகளாகவும், தட்டாஞ்சாவடியில் 4 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
காலை 11 மணி முதலே முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என்பதால் அரசியல் கட்சியினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 80.25 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, படிவம் 18 மற்றும் உரிய அடையாள அட்டை வைத்துள்ள முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.