Loading...
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: குற்றவாளி நிஷாந்த் கைதானது எப்படி?
குற்றவாளி நிஷாந்தை காவல்துறையினர் தருமபுரி அருகே தேசம்பட்டியில் கைது செய்துள்ளனர்

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: குற்றவாளி நிஷாந்த் கைதானது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 16, 2026
01:35 pm

செய்தி முன்னோட்டம்

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி நிஷாந்தை காவல்துறையினர் தருமபுரி அருகே தேசம்பட்டியில் கைது செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ். காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மாநகரக் காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் உத்தரவின்பேரில், தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் பல்வேறு மாநிலங்களிலும் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், முக்கியக் குற்றவாளி பிடிபட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

ஆம்னி பேருந்து ஓட்டுநரின் தகவலால் சிக்கிய நிஷாந்த்

போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக நிஷாந்த் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டுள்ளார்.

இருசக்கர வாகனம், கார் மற்றும் பேருந்து எனத் தொடர்ந்து வாகனங்களை மாற்றிப் பயணித்துப் போலீஸாருக்கு போக்குக் காட்டி வந்தார்.

தருமபுரி நோக்கி ஆம்னி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நிஷாந்த்தின் நடவடிக்கையில் பேருந்து ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டுநர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையிலும், நிஷாந்த்தின் செல்போன் சிக்னலைத் தொடர்ந்து கண்காணித்தும் தேசம்பட்டியில் தனிப்படை போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

நகைகள் மீட்பு

காதலி & தந்தை கைது: 5.5 கிலோ நகைகள் மீட்பு

இந்தக் கொள்ளை சம்பவத்தில் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த நிஷாந்திற்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது தந்தை சுரேஷ் மற்றும் காதலி மீனாட்சி ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனாட்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ தங்க நகைகளில் சுமார் 5.5 கிலோ நகைகளை போலீஸார் ஏற்கனவே மீட்டுள்ளனர்.

முக்கியக் குற்றவாளி நிஷாந்த் தற்போது பிடிபட்டுள்ளதால், கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை முழுமையாக மீட்கும் பணியில் தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT