Loading...
ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2026
04:31 pm

செய்தி முன்னோட்டம்

சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தமிழக முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்க கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்விகளை எழுப்பினார். "நான் நீதிபதியாக பொறுப்பேற்றுச் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தபோதே, என் ஆடிட்டரை நம்பித்தான் செய்தேன். அதேபோல விஜய்யும் தனது சொத்து விவரங்களை அவரது ஆடிட்டர் மூலமாகவே தாக்கல் செய்திருப்பார்." "அதில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான அளவில் ஏதேனும் சிறு தவறு ஏற்பட்டிருந்தால், அதை மட்டுமே காரணியாக வைத்து அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா?"

பின்னணி

வழக்கின் பின்னணி

மேலும் நீதிபதி "திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவர் ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், சிறிய அளவிலான தொகைக் விடுபட்டிருப்பது மட்டும் அவரது தேர்தல் முடிவைப் பாதித்து விடுமா?" எனக்கேள்வி எழுப்பினார்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய்யின் வேட்புமனுவில் தாக்கல் செய்யப்பட்ட படிவம் 26-ல் சொத்து விவரங்களில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தரப்பில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வேட்புமனுவில் ஏற்படும் சிறு தவறுகள் அல்லது பிழைகள் வேட்புமனுவை நிராகரிப்பதற்கான போதிய காரணம் அல்ல என்றும், தங்களது மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT