கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தமிழக அரசு சிபிசிஐடி-க்கு விசாரணையை ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த முடிவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள்.
Twitter Post
வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட்டதுடன், இந்த சம்பவம் உள்ளூர் காவல்துறையினரின் துணையின்றி, அவர்களுக்கு தெரியாமல் நடைபெற முடியாது என்பதையும் குறிப்பிட்டனர். இந்த விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-க்கு ஒப்படைக்கவும், தமிழக காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, எதிர்க்கட்சியினர், "இந்த மரணங்களுக்கு காரணமான அரசியல் பிரமுகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் அது நடப்பதாக நம்புகிறோம்," என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.