
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழை எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தெற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IMD வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழக தென் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் அடுத்த 48 மணி நேரத்தில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதன் தாக்கத்தால் ஏப்ரல் 12 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், ஏப்ரல் 10 வரை புதுச்சேரி, காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை சாதாரணத்தை விட 3°C அதிகமாக இருக்கலாம்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருந்து, அதிகபட்ச வெப்பநிலை 36°C வரை செல்லலாம் என தெரிவித்துள்ளது.
நிலவரம்
தமிழகத்தில் நேற்றைய வானிலை நிலவரம்
நேற்று மாலை நிலவரப்படி, வேலூரில் அதிகபட்சமாக 38.7°C (102°F) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 38°C மேற்பட்ட வெப்பநிலை காணப்பட்டது.
அதே நேரத்தில், தமிழகத்தின் தென் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் திற்பரப்பு பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் சுருள்கோடு, பேச்சிப்பாறை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.