ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் செல்கின்றனர். தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் முன்பதிவு செய்து பலர் பயணத்தை தொடங்கியுள்ளனர். அதிகரித்த பயணத்தை கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் ஆம்னி சேவைகளை மேம்படுத்தி, கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகின்றன. குறிப்பாக, மாதவரம், தாம்பரம், கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் கூட்டம் மிகுந்துள்ளது. போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரமாக செய்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மக்கள் பாதுகாப்பாக புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பேருந்து நிலையங்கள் மட்டுமல்லாது மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகள் ஆகியவற்றிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. மேலும், கோயம்பேடு, தாம்பரம், மற்றும் பாரிமுனை போன்ற மார்க்கெட் பகுதிகளில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால், சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு, வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த பண்டிகைகளையொட்டி கடந்த இரண்டு நாட்களில், 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.