4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: ஸ்ரீநகர் உட்பட 10 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இன்று 4 -ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நேரத்தில் ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, மற்றும் சமீபத்தில் உணின் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 96 தொகுதிகளில் மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான 17.70 கோடி பேரில் 8.73 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்
#ElectionBreaking | 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!#SunNews | #Elections2024 pic.twitter.com/SzFquMyIWf— Sun News (@sunnewstamil) May 13, 2024
களம் காணும் முக்கிய வேட்பாளர்கள்
இந்த 4ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பளர்கள்: உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுப்ரதா பதக் நிற்கிறார். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மஹுவா மொய்த்ரா போட்டியிடுகிறார். சமீபத்தில் பணத்திற்கு கேள்வி கேட்கும் விவகாரத்தில் மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ரா மீண்டும் வெற்றி பெறுவாரா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அதேபோல, மேற்கு வங்கத்தின் பகரம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் யூசூப் பதான் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக சார்பில் நிர்மல் சந்திர சகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.