ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் - பால்வளத்துறை அமைச்சர்
ஆவினில் ரூ.1,60,000வரை கடன் பெறும் புதிய திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் அறிக்கை ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மாநிலத்தில் பால் உற்பத்தியினை பெருக்கி விவசாயிகள் வாழ்வு மேம்படும் நோக்கிலும், மாநிலத்திலுள்ள மொத்த உற்பத்தியில் விவசாயம் சார்ந்த உற்பத்தியினை பெருக்கும் வகையிலும் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாட்டு கடன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.210கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும், தற்போது ஆவின் பெடரல் வங்கியோடு இணைந்து புதிய கடன் வழங்கும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, விவாசாயிகள் தங்கள் கடன் விண்ணப்பத்தினை பூர்த்திச்செய்து கொடுத்தவுடன் அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இன்று(டிச.,29)ஆவின் தலைமையகத்தில் 10 பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் தொகை விநியோகம்
இத்திட்டம் மூலம் சுமார் ரூ.1,60,000 வரை எந்தவித பிணையுமின்றி கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதற்கான வட்டி விகிதம் 9.5% ஆகும். பெறப்படும் கடன் தொகை 24 தவணைகளில் திரும்ப செலுத்தவேண்டும். மேலும் முறையாக பெற்ற கடனை செலுத்தும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு 1 சதவிகித ஊக்கத்தொகை கடன் தொகையில் இருந்து வழங்கப்படும் என்றும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 1,69,673 விண்ணப்பங்கள் இக்கடனை பெறுவதற்காக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனுள் தகுதியான விண்ணப்பங்களுக்கு உடனடியாக கடன் தொகை விநியோகிக்கப்படவுள்ளது என்று தெரிகிறது. முதற்கட்டமாக இன்று(டிச.,29)ஆவின் தலைமையகத்தில் 10 பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.