ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். அரிஹல் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் நேற்று தேர்தல் வேட்டை நடத்தியதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தனர். இந்த தேடுதல் வேட்டையில், பதுங்கி இருந்த தீவிரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால், அவர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில், தீவிரவாதி கொல்லப்பட்டார் என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
கைதுப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
கொல்லப்பட்ட நபர் பிஞ்சூரா ஷோபியானில் பகுதியைச் சேர்ந்த, கிஃபாயத் அயூப் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, லஷ்கர்-இ-தொய்பா உடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கிஃபாயத் அயூப் அலி பயங்கரவாதம் தொடர்பான பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை பதிவுகள் சுட்டிக் காட்டுவதாக, அந்த செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும், என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து, தீவிரவாதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் உட்பட குற்றம் சாட்டப்படக்கூடிய பொருட்கள், என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.