முதல்வர் மம்தா பனர்ஜீ-ஐ சந்திக்க தயார்..ஆனால்; கோரிக்கைகளை பட்டியலிட்ட மருத்துவர்கள்
மேற்கு வங்க அரசு இன்று, புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தலைமைச் செயலாளரின் கடிதத்திற்கு பதிலளித்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடவேண்டும் என பட்டியலை தயார் செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு வங்காள தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த் புதன்கிழமை மருத்துவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மருத்துவர்களின் போராட்டங்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக மீண்டும் வலியுறுத்தி, 12-15 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் மாநிலச் செயலகத்திற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
மருத்துவர்களின் பதில் கடிதம்
கடிதத்திற்கு பதிலளித்த மருத்துவர்கள், குறைந்தது 30 பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அனுப்ப விரும்புவதாகவும், அனைத்து தரப்பினரிடையேயும் வெளிப்படைத்தன்மைக்காக கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். மிக முக்கியமான விஷயங்களை முன்வைத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றும், தங்களின் 5 அம்ச கோரிக்கைகளை மையமாக வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்புவதாக பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?
மருத்துவர்கள் முன்வைத்த முக்கியான ஐந்து அம்ச கோரிக்கைகளில்: இறந்து போன பெண் மருத்துவரின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு அனைத்து நபர்களையும் பொறுப்பேற்க வேண்டும் - அத்துடன் எந்த ஆதாரங்களையும் அழித்தல் - பொறுப்புக்கூறல் இல்லாமல் அவர்களை தண்டிக்க வேண்டும் முன்னாள் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுகாக்கப்படவேண்டும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மற்றும் சுகாதார செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் உள்ளிட்டோர் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும் சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல் வேண்டும் மற்றும் அரசாங்க சுகாதார நிறுவனங்களில் நிலவும் 'அச்சுறுத்தல் கலாச்சாரத்தை' அகற்ற வேண்டும்
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவர்கள் போராட்டம் தொடர்கிறது
திங்களன்று, உச்ச நீதிமன்றம், செவ்வாய்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டது மற்றும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணியில் சேர மாட்டோம் என்று மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கொட்டகைகள் அமைத்து, மின்விசிறிகள் அமைத்து, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கும் திட்டம் இல்லை என்பதை சுட்டிக்காட்டினர்.