பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டும் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது. ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் 88.52 ஏக்கரில் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன தொழில்நுட்பம் கொண்டு இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது என்று கூறப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ள நிலையில், காவல் நிலையம், பூங்கா உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
புதிய பேருந்து நிலையத்தினை முதல்வர் திறந்து வைப்பார் என்று தகவல்
கடந்த 12ம்.,தேதி வண்டலூரிலிருந்து 100 அரசுப்பேருந்துகளை புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுப்பி, ஊரப்பாக்கம் வழியே வெளியேறும் வண்ணம் சோதனையோட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று(டிச.,25)கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர் பாபு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, "வரும் பொங்கல் பண்டிகைக்குள் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும், முதல்வர்.மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைப்பார்"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தினந்தோறும் 840-ஆம்னி பேருந்துகளும், 2,310-பேருந்துகளும் இயக்கப்படும்" என்றும், "இப்பேருந்து நிலைய வளாகத்திற்குள் தனி காவல்நிலையம், மருந்துக்கடைகள், தீயணைப்புத்துறை வண்டிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகள் அமையப்பெறும்" என்றும் கூறியுள்ளார்.