அயோத்தி ராமர் கோவில் உட்பட கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த காலிஸ்தானி பயங்கரவாதி பன்னுன்
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் உள்ளிட்ட இந்து கோவில்களை குறிவைத்து மிரட்டல் விடுத்துள்ளார். தடைசெய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி (SFJ) அமைப்பால் வெளியிடப்பட்ட வீடியோவில், நவம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என பன்னூன் எச்சரித்துள்ளார். கனடாவின் பிராம்ப்டனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ, இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் உள்ளது. பன்னூன் தனது அறிக்கையில், "வன்முறை நிறைந்த இந்துத்துவா சித்தாந்தத்தின் பிறப்பிடமான அயோத்தியின் அடித்தளத்தை நாங்கள் அசைப்போம்" -- என இந்தியாவில் உள்ள ஒரு மத ஸ்தலத்திற்கு நேரடி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் எனவும் மிரட்டல்
கடந்த மாதம், நவம்பர் 1 மற்றும் 19க்கு இடையில் ஏர் இந்தியா விமானங்களில் பறப்பதற்கு எதிராக பன்னுன் பயணிகளை எச்சரித்தார். "சீக்கிய இனப்படுகொலை"யின் 40வது ஆண்டு விழாவை ஒட்டி அவரது மிரட்டல் செய்தி ஒத்துப்போவதாக பன்னுன் கூறினார். அது மட்டுமின்றி பன்னூன் இந்திய தூதர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பன்னூனின் SFJ, பல்வேறு இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தனி சீக்கிய நாடு என்ற கருத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பன்னூனும் பல அறிக்கைகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜூலை 2020 இல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் இந்திய அரசாங்கம் பன்னூன் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.