கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம்
கேரளாவில், நேற்று காலை, ஒரு சமய கூட்டத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில், இன்று பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. அதில் 12 வயது சிறுமியும் ஒருவர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவின் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. யெகோவாவின் பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற அந்த மூன்று நாள் கூட்டத்தின் கடைசி நாளான நேற்று, தொடர்ச்சியாக மூன்று குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த குண்டுவெடிப்பிற்கு தான் தான் காரணம் என டொமினிக் மார்ட்டின் என்பவர், நேற்று போலீசில் சரணடைந்துள்ளார்.
குண்டு வெடிப்பை தொடர்ந்து, டெல்லி, சென்னையின் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளாவின் எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும், கர்நாடகா, மும்பை மற்றும் தலைநகர் டெல்லியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும், போலீஸ் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து, சென்னைக்கு வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின், குண்டுவெடிப்பு நடந்த அதே 'யெகோவாவின் சாட்சிகள்' சபையின் உறுப்பினர் ஆவார். அந்த கிறிஸ்தவ சபை, தேச விரோத செயலில் ஈடுபட்டதால் தான், குண்டு வைத்ததாக, அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். சரணடைவதற்கு முன்பு, குண்டுவைத்ததற்கான காரணத்தை அவர் முகநூல் லைவ் மூலம் தெரிவித்திருந்தார். அவரது இணைய கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த கேரளா முதலமைச்சர்
இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், இன்று அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த குண்டுவெடிப்பை குறித்து விசாரிக்க 20 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைந்துள்ளதாகவும் அவர் நேற்று அறிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அம்மாநிலத்தின் அனைத்து கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளது. "இது பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கேரள அரசின், மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை தான்" என எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்த சம்பவத்தை மத்திய புலனாய்வு துறையினர், கேரளாவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.