சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தான் கேரள தொடர் குண்டுவெடிப்புக்கு காரணம்- காவலர்கள் உறுதி
கேரளாவில் இன்று காலை ஒரு கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு சரணடைந்த நபர் தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர், குண்டுவெடிப்பு நடந்த அதே கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் ஆவார். கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தானே காரணம் என்று அவர் கூறினார். அதன்பிறகு, அவரை தீவிரமாக விசாரித்த போலீசார் அந்த குண்டுவெடிப்புக்கு அவர்தான் காரணம் என்பதை உறுதி செய்துள்ளனர். "திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். அவர் பெயர் டொமினிக் மார்ட்டின். அவர் அதே கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர்." என்று முன்பு போலீஸார் கூறியிருந்தனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் கேரள முதல்வர்
ஆனால், அவர் தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணமா இல்லையா என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நபரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பிறகு, அந்த குண்டுவெடிப்புக்கு அவர்தான் காரணம் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, வெடிபொருட்கள் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்ததாகவும், இன்று காலை 9:40 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நடந்ததாகவும், இந்த தாக்குதலில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (IED) பயன்படுத்தப்பட்டதாகவும் கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.