
மூளை உண்ணும் அமீபிக் நோயால் அதிகரிக்கும் பாதிப்பு; கேரளாவில் ஆறாவது நபர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
அரிதான மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் மூளை தொற்றுநோயான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Amoebic Meningoencephalitis) நோயால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறு ஆனது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயதான ஷாஜி, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை (செப்டம்பர் 11) காலை உயிரிழந்தார். அவர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தூய்மையற்ற நீரில் காணப்படும் அமீபாவால் இந்த நோய் முதன்மையாக ஏற்படுகிறது. ஷாஜிக்கு இந்தத் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை சுகாதார அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
சுகாதாரத்துறை
சுகாதாரத்துறை நடவடிக்கை
இருப்பினும், ஜூலை மாதத்திலிருந்து மூளைக் காய்ச்சல் பாதிப்புகள் அடிக்கடி பதிவானதால், சுகாதாரத் துறை உடனடியாகச் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் உள்ள கிணறுகள் மற்றும் குளங்களில் குளோரினேஷன் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் 10 நோயாளிகள் இந்த நோய்க்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வாரம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் இதே நோயால் உயிரிழந்தார். சுகாதார அதிகாரிகள் இந்த அபாயகரமான நோயைக் கட்டுப்படுத்த, உடனடி மருத்துவச் சிகிச்சை மற்றும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.