கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்
கேரளாவின் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து, ஏழு கிராம பஞ்சாயத்துகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக கேரள அரசு அறிவித்துள்ளது. நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு ஒன்பது வயது சிறுவன் உட்பட நான்கு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவான பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆத்தஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூர், குட்டியடி, காயக்கோடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிழும்பாறை ஆகிய ஏழு கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
7 கிராமங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளது
கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஏழு கிராமத்துக்குள் செல்ல யாரும் இப்போதைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல், அந்த கிராமங்களை விட்டு வெளியே செல்லவும் அனுமதி வழங்கப்படாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ஆனால், அந்த பகுதிகளில் இயங்கும் சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு நேரக் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. உள்ளூர் அரசு நிறுவனங்கள் மற்றும் கிராம அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள வங்கிகள், பிற அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்படும் என்று கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஆய்வகத்தை அமைத்த மத்திய ஆய்வுக் குழுக்கள்
கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மக்கள் முக கவசங்களைகளை கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட உடனேயே, மக்கள் பீதியடைய வேண்டாம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். "சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்," என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டின்(NIV) குழுக்கள் கேரளாவுக்கு வந்து. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஒரு ஆய்வகத்தை அமைத்து இது குறித்து ஆய்வு செய்து வருகின்றன.
கேரளாவில் பரவுவது பயங்கரமான 'வங்காளதேச' நிபா வைரஸ் மாறுபாடு
தற்போது கேரளாவில் பரவி கொண்டிருப்பது வங்காளதேசத்தின் நிபா வைரஸ் மாறுபாடு என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் மாநில சட்டசபையில் தெரிவித்துள்ளார். இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு மாறுபாடாகும். இந்த மாறுபாடு குறைவாகவே பரவும் என்றாலும், இது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். அதாவது, இந்த வகை நிபா வைரஸ் அதிகமாக பரவாது. ஆனால், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது எளிதான ஒரு விஷயமல்ல. NIV புனேவில் இருந்து வந்த ஆய்வுக் குழுக்களைத் தவிர, சென்னையில் இருந்து தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு இன்று கேரளாவுக்கு வந்து ஆய்வு நடத்தும் என்று ஜார்ஜ் கூறியுள்ளார்.
நிபா வைரஸ் என்றால் என்ன?
நிபா வைரஸ் என்பது விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் ஒரு ஜூனோடிக் நோயாகும். இந்த நோய் பழ வெளவால்களால் ஏற்படுகிறது. நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? பழ வெளவால்கள், பாதிக்கப்பட்ட பன்றிகள்/விலங்குகள், அசுத்தமான உணவுகள், பாதிக்கப்பட்ட மனிதர்கள் போன்றவைகளால் இந்த பாதிப்பு மனிதர்களுக்கு பரவுகிறது. நிபா வைரஸின் அறிகுறிகள்: சுவாச நோய், அபாயகரமான மூளையழற்சி, இருமல், தொண்டை வலி, தலைச்சுற்றல், தூக்கம், தசை வலி, சோர்வு, தலைவலி, மன குழப்பம் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் முன்னெச்சரிக்கைகள்: இந்த வைரஸுக்கு உறுதியான சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சுத்தமான உணவை சாப்பிடுவது, விலங்குகளிடம் இருந்து விலகி இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.