மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்தியதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக கேரள அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) (எண். 2) மசோதா, 2021; கேரள கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022; மற்றும் 2022 முதல் இயற்றப்பட்ட இரண்டு கூடுதல் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாக்கள் ஆகிய மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் அதை நிறுத்தி வைத்துள்ளார். எந்த காரணமும் கூறாமல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கேரள அரசு கூறி வருகிறது.
ஆளுநர், குடியரசு தலைவர் மற்றும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசு இந்த வழக்கில் பல தரப்பினர் மீதும் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் செயலாளர் ராஜேஷ் வர்மா, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் அவரது கூடுதல் செயலாளர் ஆகியோர் மீது கேரள அரசு குற்றம் சுமத்தியுள்ளது. அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலின் கீழ் வரும் விஷயங்களை ஆளுநர் மட்டுமே கையாள வேண்டும் அதை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி இருக்க கூடாது என்று கேரள அரசு வாதிடுகிறது. மசோதாக்களை நீண்ட காலத்திற்கு நிலுவையில் வைத்திருப்பதும், சரியான காரணமின்றி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அவற்றை ஒதுக்குவதும் ஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கை என்று கேரள அரசு கூறியுள்ளது.