கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 25) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை இயக்கப்படும். இந்த வந்தே பாரத் ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களை இணைக்கும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அரை-அதிவேக ரயிலாகும். இந்த ரயிலில் பயணிகளுக்கு தேவையான அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, கேரளாவில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கும் பிற திட்டங்கள்
கொச்சியைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் கொச்சி வாட்டர் மெட்ரோவை பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பார். அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், சிறுபான்மையினரை ஈர்க்கும் பல நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கேரளாவில் உள்ள முக்கிய கிறிஸ்தவ தலைவர்களை பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது சந்திக்க இருக்கிறார். சமீபத்தில், சில பாஜக கட்சி தலைவர்கள் கிறிஸ்தவ குடும்பங்களுக்குச் சென்றும் பாதிரியார்களை சந்தித்தும் தங்கள் தேர்தல் பணியை ஆற்றினர். பிரதமர் மோடி கிறிஸ்தவ தலைவர்களை சந்திப்பது தங்களின் தற்போதைய பிரச்சாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்று பாஜக நம்புகிறது.