நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோரின் மனுக்களை அடுத்து வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. முடாவின் நில ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த முறைகேடுகளால் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி சித்தராமையா ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் மீது வழக்கு தொடர்வதற்கான அனுமதி குறித்த தகவல் கிடைத்ததை கர்நாடக முதல்வர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், முதலமைச்சர் மீது வழக்குத் தொடரக் கோரி புகார் அளித்தவர்களில் ஒருவரான டி ஜே ஆபிரகாமை ஆளுநர் தாவர் சந்த் கெலாட் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) ராஜ்பவனுக்கு வரவழைத்துள்ளார்.
2021ல் பார்வதியின் 3 ஏக்கர் நிலத்தை முடா வாங்கியது
2021ஆம் ஆண்டில், மைசூரில் உள்ள கேசரே கிராமத்தில் பார்வதியின் 3 ஏக்கர் நிலத்தை முடா, வளர்ச்சிக்காக கையகப்படுத்தியது. அதற்கு ஈடாக தெற்கு மைசூரின் விஜயநகர் பகுதியில் அவருக்கு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரது கேசரே நிலத்தை விட விஜயநகர் மனைகள் விலை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 சட்டமன்றத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அந்த நிலத்தின் தகவலை சித்தராமையா வெளியிடத் தவறிவிட்டார் என்று ஆபிரகாம் தனது புகாரில் குற்றம் சாட்டினார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க ஜூலை 26 அன்று, கவர்னர் கெலாட் சித்தராமையாவிற்கு கடிதம் அனுப்பிய நிலையில், அவர் தனது அரசியலமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியதோடு, தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறினார்.