வாகன உரிமையாளர்களே அலெர்ட்! ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணப்பரிமாற்றம் ரத்து
செய்தி முன்னோட்டம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த ஆலோசித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் முழுமையான டிஜிட்டல் முறையை அமல்படுத்தும் நோக்கில், ஃபாஸ்டேக் அல்லது யுபிஐ போன்ற மின்னணு முறைகளை மட்டுமே அனுமதிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
பின்னணி
ஏன் இந்த அதிரடி முடிவு?
நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணத்தை எளிதாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு: ரொக்கப் பணம் கொடுக்கும்போது ஏற்படும் காலதாமதம் மற்றும் சில்லறைப் பிரச்சனைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம். டிஜிட்டல் முறையினால் டோல் வசூலில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் ஏற்படும். வாகனங்கள் தடையின்றி சுங்கச்சாவடிகளைக் கடக்க இது உதவும். தற்போது இந்தியாவில் 1,150 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன, இவை அனைத்திலும் இந்த முறை அமலுக்கு வர வாய்ப்புள்ளது.
விதிகள்
தற்போதைய கட்டண விதிகள் என்ன?
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, டிஜிட்டல் முறைக்கு மாறாத வாகனங்களுக்கு அபராதக் கட்டணம் விதிக்கப்படுகிறது. செயல்பாட்டில் இருக்கும் ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழைந்து ரொக்கமாகப் பணம் செலுத்தினால், அந்த வாகனத்திற்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஃபாஸ்டேக் இல்லாமல் ஒரு ஓட்டுநர் யுபிஐ மூலம் பணம் செலுத்த முன்வந்தால், சாதாரணக் கட்டணத்தை விட 1.25 மடங்கு மட்டுமே வசூலிக்கப்படும். ஏப்ரல் 1 முதல் ரொக்கப் பணம் பெறுவது நிறுத்தப்பட்டால், வாகன ஓட்டிகள் கட்டாயம் ஃபாஸ்டேக் அல்லது யுபிஐயை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்கும்.
வெற்றி
98 சதவீத வெற்றி
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஃபாஸ்டேக் பயன்பாடு 98 சதவீதத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான டோல் பரிமாற்றங்கள் ஏற்கனவே ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பம் மூலம் மின்னணு முறையில் தடையின்றி நடைபெறுகின்றன. யுபிஐ வசதியும் இப்போது அனைத்து டோல் கேட்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது எளிதாகியுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோரின் அனுபவம் மேலும் மேம்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எதிர்பார்க்கிறது.