நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது
நிலமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று இரவு அமலாக்கத்துறையினரால் ராஞ்சியில் கைது செய்யப்பட்டார். முன்னதாக, கைது பற்றி முன்கூட்டியே அறிந்ததுபோல, நேற்று மாலை ஹேமந்த் சோரன் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் அனுப்பிய சில மணிநேரத்திலேயே, அவரின் கைது படலம் நடந்தேறியது. அமலாக்கத்துறை, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக புதன்கிழமை மாலை, நில மோசடி தொடர்பாக ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினாரால் விசாரிக்கப்பட்டார் ஹேமந்த் சோரன். ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஆளும் கட்சியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அமைச்சர் சம்பாய் சோரன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை ஆளுநரிடம் வழங்கினார்.
குற்றவழக்கில் கைதாகும் மூன்றாவது ஜார்கண்ட் முதல்வர்
ஜார்கண்ட் அரசியல் வரலாற்றில் குற்றவழக்கில் கைதாகும் மூன்றாவது முதலமைச்சர் ஹேமந்த் சோரன். முன்னதாக, நிலக்கரி பேர வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினாரால் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டவர் மது கோடா. அவர் 2006இல் இருந்து 2008 வரை ஜார்கண்ட் முதல்வராக பதவி வகித்தார். அதேபோல, ஹேமந்த் சோரனின் தந்தையும், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சிபு சோரன், அவரது தனிச் செயலர் சசிநாத் ஜாவை கடத்தி, கொலை செய்த வழக்கில், தில்லி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். நவம்பர் 15, 2000 அன்று ஜார்கண்ட் உருவானதிலிருந்து, ஆறு முதல்வர்களையும், மூன்று ஜனாதிபதி ஆட்சியையும் கண்டுள்ளது. ஒரே ஒரு முதல்வர், பாஜகவின் ரகுபர் தாஸ் மட்டுமே தனது முழு பதவிக் காலத்தை முடித்துள்ளார்.