Loading...
ஜம்மு-காஷ்மீர் CRPF வீரர்களுக்கு பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை, குண்டு துளைக்காத கவச உடை கட்டாயம்
CRPF வீரர்களுக்கு புதிய மற்றும் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன

ஜம்மு-காஷ்மீர் CRPF வீரர்களுக்கு பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை, குண்டு துளைக்காத கவச உடை கட்டாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2026
04:47 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 CRPF வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மத்திய ரிசர்வ் காவல் படை புதிய மற்றும் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் ஜி.பி. சிங் மற்றும் டெல்லியை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு நேரில் சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்த பிறகு இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள்

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான முக்கிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகள்

பணியில் இருக்கும்போது வீரர்கள் செல்போன் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குழுத் தளபதிகள் மட்டுமே மிக அவசியமான அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளுக்குச் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

பணியில் ஈடுபடும் அனைத்து வீரர்களும் குண்டுதுளைக்காத மேலாடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகள் மற்றும் நிலையான பாதுகாப்பு இடங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு, நடமாடும் குண்டுதுளைக்காத பாதுகாப்பு அரண்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்துப் பிரிவுத் தளபதிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை மற்றும் இரவு நேரங்களில் சோதனைச் சாவடிகளில் போதிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் முறையான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நடைமுறை

விழிப்புணர்வு நடவடிக்கைகள் & மீறினால் கடும் நடவடிக்கை

பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு நடைமுறைகளும் இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

பணியின்போது வீரர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்து, எப்போதும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு அரண்களுக்கு வெளியே திறந்தவெளிப் பகுதிகளில் பணியாற்றுவோர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தகுந்த பாதுகாப்பு நிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவதை அனைத்து யூனிட் கமாண்டன்ட்கள் மற்றும் கம்பெனி கமாண்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், விதிமீறல்கள் மிகக் கடுமையாக கருதப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT