ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அக்டோபர் 5ஆம் தேதி முடிவடைந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18 (24 இடங்கள்), 25 (26 இடங்கள்), மற்றும் அக்டோபர் 1 (40 இடங்கள்) என மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. பாஜக, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) ஆகியவை ஹரியானாவில் முக்கியமான கட்சிகளாகும். ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை பிரதான கட்சிகளாகும்.
ஹரியானா சட்டசபை தேர்தல் 2024
ஹரியானாவில் வாக்காளர் பட்டியல்களின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,03,00,255 ஆகும். பாஜகவின் மனோகர் லால் கட்டார் 2014 முதல் 2024 வரை ஹரியானா முதலமைச்சராக இருந்தார். அவருக்குப் பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் நயாப் சிங் சைனி, முக்கியமான மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பதவியேற்றார். 2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனது. இதையடுத்து 10 இடங்களை வென்ற துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி ஆதரவுடன் ஆட்சியமைத்தது. பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக நீடித்தது. ஐஎன்எல்டி மாநிலத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 2024
வாக்காளர் பட்டியலின்படி ஜம்மு காஷ்மீரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 88,66,704 ஆகும். ஆர்ட்டிகிள் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, 2019ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருந்து வருகிறது. முன்னதாக, மெகபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (பிடிபி) பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவை 2018இல் ஆளுநரால் கலைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடைசியாக நடந்த 2014 தேர்தலில் பிடிபி 28 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 25 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், பிடிபியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. தேசிய மாநாடு கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக நீடித்தது. காங்கிரஸ் வெறும் 12 இடங்களில் மட்டுமே வென்றது.