கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு
கனடாவின் பிராம்ப்டன் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடும் விதமாக ஒரு அணிவகுப்பு நடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜூன் 4 ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக கனடா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்த ஜெய்சங்கர், "கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுக்கு இது நல்லதல்ல" என்று கூறியுள்ளார். ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கனடா அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது,
இந்த நடவடிக்கைகளை நான் திட்டவட்டமாக கண்டிக்கிறேன்: இந்தியாவுக்கான கனட தூதர்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம் மிகவும் வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ளார். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து கனடிய அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா, "இந்த தீவிரவாதம் உலகளாவிய கண்டனத்திற்கும் ஒருமித்த எதிர்ப்புக்கும் உரியது." என்று கூறியுள்ளார். "மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கனடாவில் நடந்த ஒரு நிகழ்வு பற்றிய செய்திகள் என்னை திகைக்க செய்துள்ளது. கனடாவில் வெறுப்புக்கோ அல்லது வன்முறையை ஆதரிப்பதற்கோ இடமில்லை. இந்த நடவடிக்கைகளை நான் திட்டவட்டமாக கண்டிக்கிறேன்" என்று இந்தியாவுக்கான கனட தூதர் கேமரூன் மேக்கே ட்வீட் செய்துள்ளார்.