ஐடிஐ மாணவர்களுக்கு ஐஐடிக்கு இணையான மரியாதை வழங்கப்பட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
செய்தி முன்னோட்டம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிலும் மாணவர்களுக்கு இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி) மாணவர்களுக்கு இணையான மரியாதை அளிக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டானில் சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது தேசியத் திறன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். வழக்கமான பல்கலைக்கழக பட்டங்களுக்கு மட்டுமே சமூகம் முக்கியத்துவம் அளிக்கும் மனநிலை மாறி தொழிற்கல்விக்கும் கைத்தொழில் திறன்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
போக்கு மாற வேண்டும்
ஐடிஐ படிப்பதை பெற்றோர்களும் உறவினர்களும் ரகசியமாக வைக்கும் போக்கு மாற வேண்டும்
ஒரு மாணவர் ஐடிஐ பயிற்சியில் சேர்ந்தால் அதனைப் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வெளிப்படையாக சொல்ல வெட்கப்பட்டு ரகசியமாக வைப்பதாகப் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
வழக்கமான கல்லூரிக்கு செல்லாமல் கைத்தொழில் சார்ந்த பயிற்சி பெறுவதால் அதனைக் குறைவாக மதிப்பிடும் போக்கு சமூகத்தில் நிலவுகிறது.
தொழிற்கல்வி என்பது உயர் கல்விக்கு மாற்றான இரண்டாம் நிலைத் தேர்வு அல்ல என்றும், திறன்மிக்க வேலைவாய்ப்பிற்கான முதன்மைப் பாதை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உண்மையான பலம்
பெரிய நிறுவனங்களை இயக்கும் உண்மையான பலம் ஐடிஐ பயிற்சி பெற்ற தொழிலாளர்களே
தொழில்துறையின் முதுகெலும்பாக ஐடிஐ தொழிலாளர்கள் திகழ்வதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
எந்தவொரு பெரிய நிறுவனத்திலும் கல்விப் பட்டம் பெற்றவர்கள் சிலர் மட்டுமே இருப்பார்கள் என்றும், ஆனால் அந்த நிறுவனத்தைத் தினசரி இயக்கும் உண்மையான சக்தி அங்கு பணியாற்றும் இருநூறு அல்லது முன்னூறு ஐடிஐ பயிற்சி பெற்ற நிபுணர்களிடமிருந்தே வருகிறது என்றும் அவர் விளக்கினார்.
எனவே சமூகத்தின் பார்வையில் ஆழமான உளவியல் மாற்றம் உடனடியாக தேவை என அவர் வலியுறுத்தினார்.
தன்னம்பிக்கை
மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரிக்கு பாராட்டும் மாணவர்களின் தன்னம்பிக்கையும்
இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் அவரது குழுவினரை பிரதமர் மோடி பாராட்டினார்.
பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களைப் பெற்ற ஐடிஐ மாணவர்களின் நேர்த்தியான தோற்றமும் தன்னம்பிக்கையும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை விட சிறப்பாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறையின் திறன் தேவைக்கும் சமூக அங்கீகாரத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இத்தகைய விழாக்கள் உதவும் எனப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.