டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை
நேற்றுமாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நடந்தது. இது குறித்து பேசிய இஸ்ரேல் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், "தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:08 அளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புக் குழு இன்னும் நிலைமையை ஆராய்ந்து வருகிறது" என்று நேற்று கூறியிருந்தார். புதுடெல்லியில் உள்ள சாணக்கியபுரி தூதரக வளாகத்தில் இருக்கும் இஸ்ரேலிய தூதரகம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை
இந்த குண்டுவெடிப்பு ஒரு 'பயங்கரவாத தாக்குதலாக' இருக்கலாம் என்றும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது. மேலும், இஸ்ரேலிய நாட்டவர்கள் நெரிசலான இடங்கள்(மால்கள், சந்தைகள்) மற்றும் மேற்கத்தியர்கள்/யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு சேவை செய்யும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலிய மக்கள் பொது இடங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலிய சின்னங்களை வெளிப்படையாகக் காண்பிப்பதைத் தவிர்க்கவும், பாதுகாப்பற்ற பெரிய அளவிலான நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும், இஸ்ரேலிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் தூதரகப் பகுதியான சாணக்யபுரி பகுதியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குப் பின்னால் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து காவல்துறை உஷார்படுத்தப்பட்டது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.