NEET விவகாரத்தை அடுத்து 2024 UGC-NET தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி
யுஜிசி-நெட் (பல்கலைக்கழக மானியக் குழு - தேசிய தகுதித் தேர்வு) தேர்வு நடைபெற்ற ஒரு நாள் கழித்து, தேர்வை ரத்து செய்யவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. "தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்பட்டிருக்கலாம்" எனக் NTA தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி, UGC-NET நாடு முழுவதும் 317 நகரங்களில் 1205 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இது பற்றி வெளியிட்ட அறிக்கையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சில உள்ளீடுகளைப் பெற்றுள்ளது. இது படி, தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இந்த விவகாரம் முழுமையான விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்படுகிறது என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
NEET தேர்வில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் NET தேர்விலும் குளறுபடி
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) பதவிக்கான தகுதியைத் தீர்மானிக்க UGC-NET நடத்தப்படுகிறது. தேர்வின் நேர்மை குறித்த இந்த தகவலை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தேசிய சைபர் கிரைம் த்ரெட் அனலிட்டிக்ஸ் பிரிவு தான் கண்டறிந்துள்ளது. "UGC-NET ஜூன் 2024 தேர்வை ரத்து செய்ய இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரு புதிய தேர்வு நடத்தப்படும். அதற்கான தகவல்கள் தனித்தனியாக பகிரப்படும்" என்டிஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, NEET 2024 தேர்வில் பீகார் போன்ற மாநிலங்களில் வினாத்தாள் கசிவுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.