Loading...
ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது வான்வழித் தாக்குதல்: குஜராத் மாலுமி பலி, 13 பேர் மீட்பு
இந்தியக் கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல் மீது வான்வழியாக இனம்தெரியாத ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது வான்வழித் தாக்குதல்: குஜராத் மாலுமி பலி, 13 பேர் மீட்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2026
11:18 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் கடற்பகுதியில் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்த இந்தியக் கொடி பொருத்தப்பட்ட MSV Al Jusufi என்ற சரக்குக் கப்பல் மீது வான்வழியாக இனம்தெரியாத ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த குஜராத்தை சேர்ந்த இந்திய மாலுமி காந்தர் நஹீம் அஜீஜ் பரிதாபமாக உயிரிழந்தார். எஞ்சிய 13 மாலுமிகளும் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

கப்பல் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இரங்கல்

இச்சம்பவம் குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது X தளத்தில் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார்.

நவம்பர் 2 நடைபெற்ற இத்தாக்குதலில் 13 இந்திய மாலுமிகள் ஓமன் கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாலுமியின் உடலை விரைவாக இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவரவும், மீட்கப்பட்ட 13 மாலுமிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் ஓமானில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஆபத்து

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய மாலுமிகளுக்கு ஆபத்து

அமெரிக்கா - ஈரான் போர் மற்றும் செங்கடல் பகுதியில் கூடிவரும் போர்ப்பதற்றத்திற்கு இடையே இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அரிதாகவே நிகழ்ந்து வந்தன.

இருப்பினும், இப்போரின் தாக்கத்தால் இதுவரை 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அதிகரிக்கும் அச்சுறுத்தல் காரணமாக, அப்பகுதியில் இந்தியப் பிரஜைகள் வணிக கப்பல்களில் பணியாற்றுவதற்கு இந்திய அரசு முன்னதாகத் தடை விதித்திருந்தது.

மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா கடற்பாதைகளில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச கடல்சார் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

ADVERTISEMENT