
கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தும் இந்திய ஹேக்கர்கள் குழு
செய்தி முன்னோட்டம்
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கும் தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்ததில் இருந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இரு நாடுகளும் வர்த்தக உறவை நிறுத்தியிருப்பதோடு, இரு நாட்டு மக்களுக்கும் வழங்க வேண்டிய விசாக்களை இரு நாடுகளும் நிறுத்தி வைத்திருக்கின்றன.
இந்நிலையில், கனடா நாட்டு அரசு வலைத்தளங்கள் மீது இந்தியவைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியன் சைபர் ஃபோர்ஸ் (Indian Cyber Force) என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்தக் குழுவானது, இந்த சைபர் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை பகிரங்கமாக தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பதிவிட்டு வருகிறது.
கனடா
கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்:
கடந்த செப்டம்பர் 21ம் தேதியே கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்த ஹேக்கர்கள் குழு.
மேலும், தற்போது வரை கனடாவின் மருத்துவமனை, கனடாவின் விமானப்படை வலைத்தளம், கனடாவின் தேர்தல் வலைத்தளம் மற்றும் பாதுகாப்புத்துறை வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது அந்த ஹேக்கர்கள் குழு.
"கனடா மக்கள் மீது எங்களுக்கு எந்த வெறுப்பு இல்லை. ஆனால், இந்தியாவின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கனடா முன்வைத்திருக்கிறது கனடா. நாங்கள் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரானவர்கள்." எனவும் தங்களுடைய சமீபத்திய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருக்கிறது அந்தக் குழு.