'மணிப்பூர் மக்களுக்கு துணையாக இந்தியா நிற்கிறது': பிரதமர் மோடி
இன்று இந்தியா முழுவதும், சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு, காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 140 கோடி இந்தியர்களை 'குடும்ப உறுப்பினர்களே!' என்று அழைத்து தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
"அமைதியின் மூலமே தீர்வு காண முடியும்"
நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட மோடி, " சில வாரங்களுக்கு முன்பு மணிப்பூரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இப்போது அனைத்து இடங்களிலும் அமைதி நிலவுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன". "சில நாட்களாக மணிப்பூரில் நிலவி வரும் அமைதியை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என மணிப்பூர் மக்களையும், மாநில அரசையும் நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா மணிப்பூர் மக்களுக்கு துணையாக உள்ளது. அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். மத்திய அரசும், மாநில அரசும் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன" எனக்கூறினார். பொதுவெளியில் மணிப்பூர் விவகாரம் குறித்து முதல்முறையாக பிரதமர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது