உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி
எதிர்வரும் தேர்தலில், ஆளும் பாஜக கட்சி 3-வது முறை ஆட்சி அமைக்கப்பெற்றால், இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் மேம்படும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சிபெறும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார். G20 மாநாட்டிற்காக, டெல்லி பிரகதி மைதானத்தில், மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள சர்வதேச கண்காட்சி, மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய மோடி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய பிரதமர், "மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி வருகின்றன. இப்போது உலகின் உயரமான ரயில் பாலம் இந்தியாவில் உள்ளது. இதுபோல உலகிலேயே உயரமான மலைப்பகுதியில் நீளமான சுரங்கப்பாதையும் இந்தியாவில் உள்ளது".
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்
அந்த விழாவில் மேலும் பேசிய மோடி, "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 3-வது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும். எனது தலைமையிலான 3-வது ஆட்சியின்போது இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமாக இருக்கும். எனது முதல் ஆட்சியில் உலக அளவில் இந்திய பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது. 2-வது ஆட்சியில் 5-ம் இடத்துக்குமுன்னேறி உள்ளது. இந்த வரிசையில், 3-வது ஆட்சியில் உலகின்3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்," என பேசினார். இதனிடையே, நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்று கொண்டுள்ளார். தொடர்ந்து இது குறித்த விவாதத்திற்கான தேதியை அவர் விரைவில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.