இந்தியாவில் எப்போது தொடங்கியது பயங்கரவாதம்: வரலாறு ஒரு பார்வை
வரலாற்று நிகழ்வு: ஒரு குறிப்பிட்ட குழுவின் அரசியல், மதம் அல்லது கலாச்சார இலக்குகளை அடைவதற்காக வன்முறையைப் பயன்படுத்தி அந்த குழு மற்றவர்களை அச்சுறுத்துவது பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறது. 1947இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மதரீதியாக பிரிக்கப்பட்டதே இந்தியாவில் தற்போது நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரின் அப்போதைய மகாராஜா, ஹரி சிங், முறையாக இந்தியாவுடன் இணைந்தார். ஆனால், முஸ்லிம்கள் அந்த பகுதியில் பெரும்பான்மையாக இருப்பதால், இந்த சேர்க்கையை பாகிஸ்தான் தற்போதுவரை அங்கீகரிக்கவில்லை.
பயங்கரவாதிகளுக்கு உதவும் பாகிஸ்தான் ராணுவம்
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பனிப் போர் இந்த புவியியல் சர்ச்சையை மையமாகக் கொண்டது. இரு நாட்டு அரசாங்கங்களும் எதிர் நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளை மறுக்கின்றனர். கூடுதலாக, எல்லை தாண்டிய வன்முறைகளை பாகிஸ்தான் அதிகரித்து வருவதாகவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை சீர்குலைக்க தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியளிப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற மூன்று பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின் போது, பயங்கரவாதிகள் தப்பிக்க உதவுவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுக்குளேயே இயங்கும் பயங்கரவாத அமைப்புகள்
இது போக, உள்நாட்டுக்குளேயே இயங்கும் காலிஸ்தான் தீவிரவாதம், மாவோயிஸ்ட்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) போன்றவைகளும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடுத்து வருகிறது. சமீபத்தில், மணிப்பூரில் நடந்த இனக்கலவரங்களுக்கும் தீவிரவாதம் தான் பின்னணியாக இருப்பதாக கூறப்படுகிறது. மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் சீனா இருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியாவை கடுமையாக பாதித்து வருகிறது. தீவிரமாக ஒரு கருத்தை பின்பற்றுவது தவறில்லை. எல்லோருக்கும் தனிப்பட்ட ஒரு கருத்து இருக்கும். அதனால், நம்முடைய கருத்தோடு எல்லோரும் ஒத்துப்போக வேண்டும் என்று நினைப்பதால் தான் இது போன்ற பயங்கரவாதங்களும் அதற்கான குழுக்களும் உருவாகின்றன.
பயங்கரவாதத்தை தகர்க்க இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகள்
பயங்கரவாதம் என்பது மிக அடிப்படையான மனித உரிமையை, அதாவது வாழ்வதற்கான உரிமையை மீறுவது மட்டுமல்லாமல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகவும் கருதப்படுகிறது. மற்ற நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு விவகாரங்களில் கூட்டுப் பணிக்குழுக்களை (JWGs) உருவாக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்கள் (MLATs) மற்ற நாடுகளுடன் இருதரப்பு அடிப்படையில் கையொப்பமிடப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபையின் 73 வது அமர்வில், சர்வதேச பயங்கரவாதம் (சிசிஐடி) (யுஎன்ஜிஏ) பற்றிய விரிவான மாநாட்டிற்கான தனது அழைப்பை இந்தியா வலியுறுத்தியது.1967ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய சிக்கல்களைக் கையாள்வதை சாத்தியமாக்குகிறது.
பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை
இந்தியாவில் இயங்கும் தேசிய புலனாய்வு முகமை என்பது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பணிக்குழுவாகும். அனைத்து மாநிலங்களிலும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட குற்றங்களை அரசாங்கங்களின் அனுமதியின்றி கையாளும் அதிகாரம் இந்த முகாமைக்கு இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தும் நாடாக இந்தியா உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச திட்டத்தை உருவாக்குவதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.