
இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு
செய்தி முன்னோட்டம்
விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியா கவனம் செலுத்திய இடம் கல்வி. நாட்டின் எந்தவொரு துறையின் வளர்ச்சிக்கும் கல்வியே அடிப்படையானது, எனவே அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இருந்தே கவனம் செலுத்தத் தொடங்கியது இந்தியா.
1951-ல் உலகிலேயே மிகவும் கல்வியறிவு குறைந்த நாடுகளில் ஒன்றாக இருந்தது இந்தியா. அப்போது 19.3% மட்டுமே இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்கள் இருந்தனர். மேலும், 6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளில் 43% பேர் மட்டுமே பள்ளியில் சேர்ந்து கல்வி பெற்றனர்.
இதனை மாற்ற இந்தியாவில் பல்வேறு புதிய கல்வித் திட்டங்களையும், கல்விக் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியது இந்திய அரசு.
கல்வி
இந்தியாவில் கல்வியின் வளர்ச்சி:
தொடக்கக்கல்வி இலவசமாகவும், கட்டாயமும் ஆக்கப்பட்டது. 1950-ல் 2.10 லட்சமாக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 11 லட்சமாகியிருக்கிறது. 1950-ல் 24 பல்கலைக்கழகங்களில் இருந்து, 2001-ல் 1181 பல்கலைக்கழகங்களாக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் ஐஐடிக்களையும் 1950-களிலேயே கட்டமைக்கத் தொடங்கிவிட்டது இந்தியா. 1960-க்குள் இந்தியாவில் பாம்பே, சென்னை, கராக்பூர் மற்றும் கான்பூர் ஆகிய நான்கு நகரங்களில் புதிய ஐஐடிக்கள் நிறுவப்பட்டன.
தற்போது இந்தியாவில் 23 ஐஐடிக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் உயர்கல்வியை நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கல்வி என்ற அடிப்படைக் கட்டமைப்பின் மீது தான், இந்தியாவின் பிற துறைகளின் வளர்ச்சியும் கட்டியெழுப்பப்பட்டது.
பாதுகாப்பு
பாதுகாப்புத் துறை:
இந்தியா சுதந்திரம் பற்ற பிறகு, சுற்றியுள்ள நாடுகளிடமிருந்து எல்லையைப் பாதுகாக்க வேண்டிய தளவாடங்களையும் உருவாக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது. முக்கியமா பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து.
இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட்ட காலக்கட்டத்தில் தான், பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லையும் எட்டியது இந்தியா. 'INS கல்வரி' என்ற நீர்மூழ்கிக் கப்பலை சொந்தமாக உருவாக்கியது இந்தியா.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தளவாடங்களின் பட்டியலுக்கு இது தான் ஆரம்பப் புள்ளி. இதன் பின்பு, இந்தியாவின் பாதுகாப்பிற்குத் தேவையான பல்வேறு உபகரணங்களையும் சொந்தமாக உருவாக்கத் தொடங்கியது இந்தியா.
இந்தியாவிற்குத் தேவையான பாதுகாப்புத் தளவாடங்களை உருவாக்க 1958-ல் DRDO (Defence Research and Development Organisation) அமைப்பு நிறுவப்பட்டது.
ஏவுகணை
இந்தியா உருவாக்கிய ஏவுகணைகள்:
குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் முதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வரை பல்வேறு ஏவுகணைகளை சுயமாகத் தயாரித்திருக்கிறது இந்தியா.
பிரித்திவி, பிரமோஸ், அக்னி, நிர்பய் மற்றும் பிரஹார் ஆகிய ஏவுகணைகள் இந்தியாவிலேயே இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.
இதில் முதல் அக்னி ஏவுகணையானது 700 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டது. தற்போது அக்னி ஏவுகணை வரிசையில் அக்னி 5 ஏவுகணை வரை உருவாக்கியிருக்கிறது இந்தியா.
இந்த அக்னி 5 ஏவுகணையானது, 5,500 கிமீ முதல் 8,000 கிமீ வரையிலான இலக்கையும் சென்று தாக்கும் வகையிலான, எதிரிகள் சுலபமாகக் கண்டறிந்து தடுக்க முடியாத வகையிலான ஹைப்பர்சானிக் ஏவுகணையாகும்.
பாதுகாப்பு
இந்தியாவின் பிற உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்புகள்:
மேற்கூறியவற்றைத் தவிர்த்து, தேஜஸ் போர் விமானம், INS அரிகந்த் ஏவுகணை நீர்மூழ்கி மற்றும் INS விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பல் ஆகிய தளவாடங்களையும் இந்தியத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
செயற்கைக்கோள் எதிர்ப்பு தொழில்நுட்பத்தையும் சொந்தமாக உருவாக்கி, உள்நாட்டிலேயே இத்தகைய தயாரிப்பை உருவாக்கிய 4வது நாடாகப் பெயர்பெற்றது இந்தியா.
நிலம் விட்டு நிலம் தாக்கும் ஏவுகணைகளைப் போல, ஆகாயம் விட்டு ஆகாயத்தில் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையான அஸ்திராவையும் உள்நாட்டிலேயே தயாரித்திருக்கிறது இந்தியா. இதன் மூலம், இத்தகைய திரன் வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டிருக்கும் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது.
பாதுகாப்பு தளவாட தயாரிப்பில் முழுவதுமாக உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்றாலும், முக்கியமான தொழில்நுட்பங்களை பிற நாடுகளின் உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரித்திருக்கிறது இந்தியா.