ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் கலந்துக்கொள்ள ஒரு சில இந்தியர்கள் "கட்டாயப்படுத்தப்பட்டதாக" கூறப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, எச்சரிக்கையுடன் செயல்படவும் என்றும் இந்த உள்நாட்டு போர் விவகாரத்திலிருந்து விலகி இருக்கவும் மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒரு செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,"ஒரு சில இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் ஆதரவு வேலைகளுக்கு கையெழுத்திட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்தோம்". "தொடர்ந்து, இந்திய தூதரகம் இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றது. இந்த விவகாரத்தில், அனைத்து இந்திய பிரஜைகளும் உரிய எச்சரிக்கையுடன் செயல்படவும், இந்த போரில் இருந்து விலகி இருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனத்தெரிவித்தார்.
ரஷ்யா ராணுவ உதவியாளர்களாக அனுப்பட்ட இந்தியர்கள்
இந்த வார தொடக்கத்தில், ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான போரில் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று இந்தியர்களைக் காப்பாற்றுமாறு வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார். தி இந்து நாளிதழில் ஒரு செய்தியின்படி, குறைந்தது மூன்று இந்திய பிரஜைகள் ஒரு முகவரால் ஏமாற்றப்பட்டு, ரஷ்யாவிற்கு இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக பணிபுரிய அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் ஒவைசியை அணுகியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.