இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம்
இந்த ஆண்டின் பருவமழை காலத்தில், இந்தியாவில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் ஒட்டுமொத்த மழைப்பொழிவு நீண்ட கால சராசரியான 87 செ.மீ.யில் 106 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியாளர் கூட்டத்தில், IMD தலைவர் ம்ருத்யுஞ்சய் மொஹபத்ரா பேசியபோது,"1951 முதல் 2023 வரையிலான தரவுகள், லா நினா, எல் நினோ நிகழ்வைத் தொடர்ந்து ஒன்பது சந்தர்ப்பங்களில், இந்தியா இயல்பை விட அதிகமான பருவமழையைக் கண்டதாகக் காட்டுகிறது" என்றார். "இந்தியாவில் நான்கு மாத பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ ஆண்டான 2023ஆம் ஆண்டில், நீண்ட கால சராசரியான 868.6 மிமீயுடன் ஒப்பிடும்போது -- 820 மிமீ --அதாவது சராசரிக்கும் குறைவான மழையைப் பெற்றது. எனினும் 2023க்கு முன், இந்தியாவில் நான்கு ஆண்டுகளாக பருவமழை காலத்தில் "இயல்பு" மற்றும் "இயல்புக்கு மேல்" மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. எல் நினோ என்பது, மத்திய பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீரின் அவ்வப்போது வெப்பமயமாதலால் இந்தியாவில் பலவீனமான பருவக்காற்று மற்றும் வறண்ட நிலைகளுடன் தொடர்புடையது. தற்போது, பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் மிதமான எல்-நினோ நிலைகள் நிலவுகின்றன. மே மாதத்தின் கடைசி வாரத்தில் பருவமழை காலத்திற்கான புதுப்பிக்கப்பட்ட மழை முன்னறிவிப்புகளை வெளியிடும் என்றும் IMD தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தியாவின் வருடாந்திர மழைப்பொழிவில் 70 சதவீதத்தை வழங்குகிறது.