
அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா
செய்தி முன்னோட்டம்
அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இரட்டை புயல்கள் உருவாகும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அரபிக்கடலில் 'தேஜ்' புயலும், வங்காள விரிகுடாவில் 'ஹமூன்' புயலும் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகுவது மிக அரிதான ஒரு வானிலை நிகழ்வாகும். கடைசியாக 2018ஆம் ஆண்டில் இந்தியா இரட்டை புயல்களை எதிர்கொண்டது. அதன் பின், 5 ஆண்டுகளுக்கு பிறகே தற்போது இரட்டை புயல்கள் உருவாகி இருக்கின்றன.
தென்மேற்கு அரபிக்கடலில் உருவான 'தேஜ்' புயல், தொடர்ந்து வலுப்பெற்று இன்று பிற்பகல் மிகக் கடுமையான புயலாக மாறும்.
அதே நேரத்தில், ஹமூன் புயல் வங்காள விரிகுடாவில் வலுப்பெற்று, ஆந்திர கடற்கரை அருகில் வந்து, மேற்கத்திய இடையூறுகளால் திசைதிருப்பப்படும்.
கஜசவ்
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இந்த புயல்களின் தாக்கம் இருக்கும்
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பதிவாகியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 23-ம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறினால், இதற்கு 'ஹமூன்' என்று பெயரிடப்படும்.
எனினும், 'ஹமூன்' புயல் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த இரண்டு புயல்களாலும், சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சிறிய வானிலை மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மாலை வேளைகளில், கேரளா மற்றும் தமிழகத்தின் உள்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என தனியார் வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.