எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் காலை 11 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுவதாக, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கார்கே அறிவித்துள்ளார்.
பாஜக அரசின் சஸ்பெண்ட் நடவடிக்கையை கடுமையாக கண்டித்து உள்ள எதிர்க்கட்சிகள், "அக்கட்சியை ஜனநாயகமாக நடந்து கொள்ள" வலியுறுத்தியுள்ளனர்.
2nd card
எதிர்க்கட்சி எம்பிக்கள் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்?
டிசம்பர் 13ஆம் தேதி, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளில், நாடாளுமன்ற மைய வளாகத்திற்குள் கலர் புகை குண்டுகளுடன் இருவர் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்து, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.
இதை மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி என்று கூறும் எதிர்க்கட்சிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரி, அவையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதன் விளைவாக இந்த வாரத்தின் தொடக்கம் முதல் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது வரை, இரு அவைகளிலும் இருந்து 146 எம்பிக்கள் அவையை முடக்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்குக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.