நீட் முறைகேடு, அக்னிபாத், கல்வி நிறுவனங்களின் முறைகேடு: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முடிவு
இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று காலை மீண்டும் கூடவிருக்கும் மக்களவைக் கூட்டத்தொடரில் மீண்டும் அமளி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மத்திய கல்வி நிறுவனங்களின் முறைகேடு, நீட், அக்னிபாத் போன்ற விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கேள்வி கேட்க திட்டமிட்டுள்ளது. அதோடு, மத்திய புலனாய்வு அமைப்புகளை முறைகேடாக பயன்படுத்துவதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும் AAP தலைவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக வெள்ளிக்கிழமை கூட்டத்தொடரில், குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் முன், நீட் தேர்வு முறைகேடுகள் மீதான விவாதத்துக்கு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மாட்டோம் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இக்கூட்டத்தொடரின் முதல் அமர்வு சென்ற வாரம் உறுப்பினர்களின் பதவிப்பிரமாணத்துடன் தொடங்கியது.
எமெர்ஜென்சிக்கு எதிரான விமர்சனங்கள்
லோக்சபாவில் அவசரநிலைக்கு எதிரான சபாநாயகரின் கருத்து மற்றும் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் எமெர்ஜென்சி பற்றிய விமர்சனம் ஆகியவை எதிர்கட்சியினரை கோஷங்கள் எழுப்ப தூண்டியது. ராஜ்யசபாவில் வெள்ளிக்கிழமை வாதப் பிரதிவாதங்கள் அதிகரித்தது மற்றும் எதிர்க்கட்சிகள் நாள் முழுவதும் அவையை புறக்கணித்தன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குழப்பம் ஏற்பட்டது. நடப்பு அமர்வில் இன்னும் மூன்று வேலை நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முன்னதாக விவாதம் நடத்தும் மரபு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விவாதங்களும் பதில்களும்
இந்த நிலையில் விவாதங்கள் நடைபெறுமாயின், அடுத்ததாக மக்களவையில் செவ்வாய்கிழமையும், புதன்கிழமை ராஜ்யசபாவிலும் நடக்கும் விவாதத்திற்கும் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவாதங்கள் குறித்து திங்களன்று நடவடிக்கைகள் தொடங்கும் முன், எதிர்க்கட்சியான இந்தியா பிளாக்கில் உள்ள கட்சிகளும் பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் தனித்தனியாகக் கூட்டங்களை நடத்தும். இந்தக் கூட்டத்தில், அரசின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஏற்பதா அல்லது நீட் விவகாரத்தில் முதல் விவாதம் என்ற கோரிக்கையில் பிடிவாதமாக இருப்பதா என்பதை எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும். எனினும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்திற்கு முன்னதாக எந்த ஒரு பிரச்னையிலும் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மாட்டோம் என NDA வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.