ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா
ஏர் இந்தியா விமானம் தகர்க்கப்படும் என காலிஸ்தான் தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலை அடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் இந்தியா கோரியுள்ளது. இது குறித்து ஒட்டாவாவுக்கான இந்திய உயர் ஆணையர் சஞ்சய் குமார் கூறுகையில், "கனடாவில் இருந்து புறப்பட்டு, தரையிறங்கும் ஏர் இந்தியா விமானங்களுக்கு எதிரான அச்சுறுத்தலை, சம்பந்தப்பட்ட கனேடிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" எனக் கூறியிருந்தார். மேலும் "இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் இத்தகைய அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன" எனவும் தெரிவித்தார்.
யார் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள்
"சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்" அமைப்பின் நிறுவனரான குர்பத்வந்த் சிங் என்பவர், கடந்த சனிக்கிழமை வெளியிட்ட வீடியோவில், "நவம்பர் 19ஆம் தேதிக்கு மேல் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல வேண்டாம்" என எனக்கூறி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த கனடாவிடம், இந்தியா கோரி உள்ளது. ஏர் இந்தியா, கனடிய நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவர் இடையே, புது டெல்லிக்கு வாராந்திர பல நேரடி விமானங்களை இயக்குகிறது. கனடாவில் ஏற்கனவே ஏர் இந்தியா விமானத்தை குறி வைத்து காலிஸ்தானிகள் கடந்த ஜூன் 23, 1985 ஆம் ஆண்டு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில், 329 நபர்கள் கொல்லப்பட்டனர். இது தற்போது வரையிலும் கனடாவில் நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.