இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. வரலாறு காணாத அளவு இந்த வெப்ப அலை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் உச்சகட்ட வெப்பநிலை 2023 இல் பதிவு செய்யப்பட்ட இதற்கு முந்தைய சாதனையை விஞ்சும் என்று IMD அதிகாரி DS பாய் தெரிவித்துள்ளார். கடந்த வாரம், ஜார்சுகுடாவில் 43.8 டிகிரி செல்சியஸ் பதிவாகிய நிலையில், ஒடிசாவில் கடுமையான வெப்பம் நிலவியது. ஒடிசாவில் உள்ள பரிபாடாவில் 43.6 டிகிரி செல்சியஸும், நுவாபாடாவில் 43.5 டிகிரி செல்சியஸும், தல்ச்சரில் 43.4 டிகிரி செல்சியஸும், பௌத்தில் 43.2 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஒடிசாவில் ஏப்ரல் 26 முதல் 29 வரை வெப்பம் நிலவும்
அடுத்த ஐந்து நாட்களில் பீகார் மற்றும் ஜார்கண்டில் வெப்ப அலைகள் ஏற்படக்கூடும் என்றும், அடுத்த வாரத்தில் தீபகற்ப இந்தியாவில் இதே போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களில் உச்சகட்ட வெப்பநிலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை வெப்பம் தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி அறிவித்துள்ளார். கஜபதி, கஞ்சம், பாலசோர், மயூர்பஞ்ச் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு கடுமையான வெப்ப அலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், கடுமையான வானிலை காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கோடை விடுமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.