தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமழை வாய்ப்பு
தமிழகத்தின் தெற்கு கடல்பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று, நவம்பர் 10 முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தில் உள்ள அரியலூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
இதனிடையே, திருவாரூர் மாவட்டத்தில், நேற்று இரவு முதல், காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், இன்று அம்மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என திருவாரூர் மாவட்டத்தின் ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். இந்த மழையினால், நேற்று, கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதீத மழை காரணமாக பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, வைகை ஆணை நிரம்பி விட்டது. அணைக்கு அருகே வசிக்கும் மக்கள் அங்கிருந்து இடம்பெயருமாறும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.