'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம்
தமிழ்நாடு மாநிலத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் சரியான நேரத்தில், முறையான எச்சரிக்கை கொடுக்காததே இந்த பாதிப்புகளுக்கு காரணம் என்று தமிழக அரசு குற்றச்சாட்டியுள்ளது. ரெட் அலெர்ட் அறிவிப்புக்கும், வெள்ளப்பெருக்கு ஏற்பட துவங்கிய நேரத்திற்கும் இடையேயான நேர இடைவெளி மிக குறைவு என்று பால்வளத்துறை அமைச்சர் கூறியிருந்தார். தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் வானிலை அறிக்கை சரியாக இல்லை என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.
வானிலை ஆய்வு மையம் அதிநவீனமானது-நிர்மலா சீதாராமன்
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் குறித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் மாநில அரசு, வானிலை ஆய்வு மையம் குறித்து வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'வானிலை ஆய்வு மையம் அதிநவீனமானது. உரிய முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கடந்த 12ம் தேதி முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது' என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
ரெட் அலெர்ட் கொடுத்த பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தொடர்ந்து, மழை துவங்கிய பிறகும் ஒவ்வொரு 3 மணிநேரத்துக்கும் இடையே தொடர்ந்து அப்டேட் கொடுக்கப்பட்டது என்றும், இன்ச் பை இன்ச் மழையின் அளவை கணக்கிட முடியாது. ரெட் அலெர்ட் கொடுத்த பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தது ஏன்? என்றும் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், 'தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரேநாளில் பெய்துள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு உதவிகளை வழங்கி வருகிறது' என்றும், 'இந்திய விமானப்படையின் 9 ஹெலிகாப்டர்கள் மூலம் 70 நடைகள் சென்று ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருந்த 800 பயணிகளை மீட்டெடுத்துள்ளோம்' என்றும் தெரிவித்துள்ளார்.
பேரிடர் நிதி ஏற்கனவே தமிழகத்திற்கு வழங்கப்பட்டு விட்டது என தகவல்
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றதாகவும், பேரிடர் மீட்பு குழு சம்பவ இடங்களுக்கு சென்று தங்கள் மீட்பு பணிகளை துவங்கிய பின்னரே அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அங்கு வந்தனர் என்றும் கூறினார். அதே போல் தமிழகத்திற்கு இந்தாண்டு வழங்கவேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடி இரு தவணைகளாக ஏப்ரல் மாதமும், டிசம்பர் மாதம் 12ம் தேதியும் வழங்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்
இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், "மழை எச்சரிக்கையினை சரியாக தெரிவிக்காவிடில் சென்னை வானிலை ஆய்வு மையம் எதற்கு? அதனை மூடி விடலாம்" என்றும். "வானிலை மையம் செய்யும் பணியினை 5ம் வகுப்பு மாணவன் கூட செய்வான்" என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். தொடர்ந்து அவர், "இனி அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடும். அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.