சென்னை ஐஐடி-யில் மருத்துவ படிப்பு: மருத்துவக் கல்லூரி தொடங்க இயக்குநர் காமகோடி திட்டம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணித் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, பொறியியல் துறைக்கு அப்பாற்பட்டு மருத்துவக் கல்வியிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது. எதிர்காலத்தில் ஐஐடி வளாகத்திலேயே சொந்தமாக மருத்துவப் பள்ளி தொடங்கி எம்.பி.பி.எஸ் (MBBS), எம்.டி (MD) மற்றும் பிஎச்.டி (PhD) ஆகிய மருத்துவ பட்டப் படப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார்.
காரணம்
தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மருத்துவக் கல்லூரி ஏன்?
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நவீன மருத்துவத் துறையானது தொழில்நுட்பத்தை பெருமளவில் சார்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் காமகோடி, இந்தியாவிற்குத் தேவையான உயர்தர மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைப்பதே இதன் முதன்மை நோக்கம் என்றார்.
"ஒரு நாடு தனது சொந்த மருத்துவக் கருவிகளை வடிவமைக்க வேண்டுமானால், மருத்துவர்களும் பொறியாளர்களும் ஒரே கூரையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என்று அவர் விளக்கமளித்தார்.
மருத்துவத் தொழில்நுட்பம்
ஏற்கனவே உள்ள மருத்துவத் தொழில்நுட்ப பிரிவு
சென்னை ஐஐடி முற்றிலும் புதிய துறையாக இதைத் தொடங்கவில்லை.
கடந்த 2023 மே மாதத்தில், இந்தியாவில் முதன்முறையாக மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை நிறுவி, 4 ஆண்டு இளங்கலைப் படிப்பை வழங்கி வருகிறது.
இது மருத்துவக் கருவிகள் மற்றும் மென்பொருள்களை வடிவமைக்கும் நிபுணர்களை உருவாக்கும் நிலையில், புதிய மருத்துவ பள்ளி நேரடியாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பயிற்சி பெற்ற மருத்துவர்களை உருவாக்கும்.
அனுமதி
தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி
ஐஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியாக மருத்துவப் பட்டங்களை வழங்கிவிட முடியாது.
இதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC)அனுமதி மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கக் கூடிய சொந்தக் கற்பித்தல் மருத்துவமனை ஆகியவை அவசியமாகும்.
ஏற்கனவே ஐஐடி கரக்பூர் சொந்தமாக மருத்துவமனை கட்டி எம்பிபிஎஸ் மற்றும் உயர்கல்வி வகுப்புகளுக்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், சென்னை ஐஐடியும் அதே பாதையை பின்பற்றி விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவில் மருத்துவப் பட்டப்படிப்புகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.