
திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒக்கனேக்கலுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா மாநிலத்திலுள்ள குடகு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணை மற்றும் கிருஷ்ணாசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு கடந்த 2 தினங்களாக விநாடிக்கு 7,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரட்டி, ராசி மணல், அஞ்செட்டி, நாற்றாபாளையம், கெம்பாகரை மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்தும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.
காவிரி
காவிரியில் இருந்து வரும் நீரின் அளவை கண்காணிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள்
இதன் காரணமாக ஒக்கனேக்கலுக்கு திடீரென நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றிலிருந்து வரும் நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நேற்று(அக்.,10)வரை இருந்த நிலையில், இன்று(அக்.,11) காலை நிலவரப்படி விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்து தமிழ்நாடு-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியே ஒக்கனேக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் ஒக்கனேக்கலின் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனிடையே காவிரியாற்றில் இருந்து வரும் நீரின் அளவினை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.