தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,25) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ளார். இவரின் இந்த திட்டத்திற்கு பின்னணியிலுள்ள வரலாறுகளை தான் நாம் இந்த செய்தி குறிப்பில் தெரிந்துகொள்ள போகிறோம். 1900இன் துவக்கத்தில் கர்னல் ஆல்காட் என்னும் பஞ்சமர்களுக்காக துவங்கப்பட்ட பள்ளிகளில் மதிய உணவு திட்டம் துவங்குவதற்கான ஆலோசனையினை பண்டித அயோத்திதாசர் வழங்கியுள்ளார். அதன்படி இந்தியாவில் முதன்முறையாக 1920ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி சென்னை மாநகராட்சி மன்றத்தலைவரான பிட்டி தியாகராயர் தலைமையில் நடந்த மன்றக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டம் 1947ல் நிதி பற்றாக்குறையால் கைவிடப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட திட்டத்தை மீண்டும் துவங்கிய முன்னாள் முதல்வர் காமராஜ்
இதனையடுத்து, 1957ம்ஆண்டு அப்போதைய முதல்வரான காமராஜர் இத்திட்டத்தினை மீண்டும் துவங்கினார். அதன் மூலம் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தொடர்ந்து, 1982ல் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் 2ல் இருந்து 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 'சத்துணவு' திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். அதனையடுத்து 1989ல் முதல்வராக இருந்த கருணாநிதி சத்துணவு திட்டத்தில் வாரம் 2 முட்டை வழங்கும் திட்டத்தினை இணைத்தார். இது விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 2008 முதல் முட்டை உண்ணாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டமும், 2010ல் வாரம் 5 முட்டை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம்ஆண்டு செப்டம்பர்-15ம்தேதி பேரறிஞர்.அண்ணா பிறந்தநாளன்று இந்த 'காலை சிற்றுண்டி திட்டத்தினை' 1-5ம் வகுப்புவரை பயிலும் துவக்கப்பள்ளி மாணவர்களுக்காக துவக்கிவைத்தார்.
முதற்கட்ட முயற்சியாக 1,545 அரசு துவக்கப்பள்ளிகளில் மட்டும் நடைமுறைப்படுத்த காலை உணவு திட்டம்
கடந்தாண்டு இதற்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதற்கட்ட முயற்சியாக இத்திட்டம் சென்னை மற்றும் தொலைதூர கிராமங்களிலுள்ள 1,545 அரசு துவக்கப்பள்ளிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் வருகையினை அதிகரிக்கும் நோக்கில் துவங்கப்பட்ட இத்திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதுமுள்ள 31 ஆயிரத்து 8 அரசு துவக்கப்பள்ளிகளில் சுமார் 17 லட்சம் மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, மாணவர்களுக்கு தினமும் காலையில் ரவா உப்புமா, சேமியா உப்புமா, வெண்பொங்கல், ரவாப்பொங்கல், காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா, போன்ற உணவுகளும், வெள்ளிக்கிழமைதோறும் ரவா கேசரி அல்லது சேமியா கேசரியும் சேர்த்து வழங்கப்படவுள்ளது.
முன்னாள் முதல்வர்.கருணாநிதி பயின்ற திருவாரூர் மாவட்ட பள்ளியில் துவங்கப்பட்டது
இத்திட்டத்தினை முன்னாள் முதல்வர்.கருணாநிதி பயின்ற திருவாரூர் மாவட்ட திருகுவளை பள்ளியில் இன்று துவக்கிவைத்த முதல்வர், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவரும் அவர்களுடன் உணவருந்தி, மாணவர்களுடன் கலந்துரையாடினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும், சமைத்த உணவை பள்ளி மேலாண்மைக்குழு சாப்பிட்டு பார்த்தப்பின்னரே, மாணவர்களுக்கு தினமும் வழங்கவேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்தாண்டு சட்டமன்றப்பேரவையில் பேசிய முதல்வர், "நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பயிலும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு செல்வதாக அரசுக்கு தகவல் வந்தது. நேரமின்மை மற்றும் பள்ளி தூரம் மட்டும் இதற்கு காரணமல்ல. சிலரது வீட்டு சூழநிலையும் காரணம் என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த காலை சிற்றுண்டி திட்டத்தினை நாம் தீட்டியுள்ளோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருவல்லிக்கேணியில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் இந்த காலை உணவு திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார். குழந்தைகளுடன் இணைந்து அமர்ந்து உணவருந்திய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த காலை உணவு திட்டத்தால் 30 முதல் 40% மாணவர் வருகை அதிகரித்துள்ளது. பெற்றோர்களும் மாணவர்களும் இந்த திட்டத்திற்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்" என்று கூறியுள்ளார். சென்னையில் செயல்படும் 358 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 65 ஆயிரம் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயனடைவர். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.