'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும்
வரலாற்று நிகழ்வு: மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது. இதற்காக வெள்ளிக்கிழமை அன்று , முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதை பாஜக அரசு சாத்தியப்படுத்தினால், உலகிலேயே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நான்காவது நாடாக இந்தியா மாறும்.பெல்ஜியம், ஸ்வீடன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் பிற மூன்று நாடுகளாகும்.
ஸ்வீடனின் மாறுபட்ட தேர்தல் முறை
ஸ்வீடன், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் மாவட்ட மற்றும் நகராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும் நடத்துகிறது என்பது பொதுவாக அறியப்படாத ஒரு தகவலாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்வீடனில் நடத்தப்படும் தேர்தல்கள் பொதுவாக செப்டம்பர் மாதம் நடத்தப்படுகின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சுவீடனில் இந்தத் தேர்தல்கள் அனைத்தும் ஒரே நாளில் நடத்தப்படுகின்றன. ஸ்வீடனில் ஒரு விகிதாசார தேர்தல் முறை உள்ளது. அதாவது, ஒரு குறிப்பிட்ட சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கான சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன.
நேபாளத்தில் ஒருமுறை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது
நேபாளம் 2017ல் ஒரே நேரத்தில் தேசிய மற்றும் மாநில தேர்தல்களை நடத்தியது. ஆகஸ்ட் 21, 2017 அன்று, நேபாள அரசாங்கம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேசிய மற்றும் மாநில தேர்தல்களை நடத்த உத்தரவிட்டது. 2015இல் நேபாளம் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, நேபாளத்தில் நடந்த முதல் தேர்தல் இதுவாகும். ஆனால், நேபாள தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சிரமம் குறித்து கவலை தெரிவித்தது. அதன்பிறகு, நேபாள அரசாங்கம் சிறிது இடைவெளியுடன் இரண்டு கட்ட தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து, நேபாளத்தின் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 26, 2017 அன்று நடந்தது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்ட தேர்தல் டிசம்பர் 7,2017 அன்று நடந்தது.
தென்னாப்பிரிக்காவில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள்
பெல்ஜியம், நேபாளம் மற்றும் ஸ்வீடன் ஆகியவை சிறிய நிலப்பரப்பை கொண்ட நாடுகளாக இருப்பதால், நாடு முழுவதும் ஒரேநேரத்தில் வாக்கெடுப்பு நடத்துவது அந்த நாடுகளுக்கு பெரிய சவாலாக இருக்கவில்லை. அந்த வகையில், இந்தியாவுடன் ஒப்பிடும் போது தென்னாப்பிரிக்கா சிறிய நிலப்பரப்பை கொண்ட நாடாக இருந்தாலும், தென்னாப்பிரிக்காவை விட சிறந்த எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை ஒரே நேரத்தில் மாகாண மற்றும் தேசிய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்தலின் போது, தேசிய மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு தனித்தனி வாக்குப்பதிவு தாள்கள் வழங்கப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவின் தேர்தல் முறையானது பாராளுமன்றம் மற்றும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விகிதாசாரப் பிரதிநிதித்துவம்(PR) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா?
இந்தியாவின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'- மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பல சவால்கள் உள்ளன என்கின்றனர் நிபுணர்கள். முக்கியமாக, பல கட்டங்களாக நடத்தப்பட்டாலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆள் பலம் தேவைப்படும். மேலும், இதற்கு அதிக எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVMகள்) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை பாதை(VVPAT) இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கிடையில், ஏதேனும் ஒரு மாநில அரசு திடீரென்று கவிழ்ந்தால் அல்லது ஐந்தாண்டு காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டால் தேர்தலில் சிக்கல்கள் ஏற்படலாம். இதுதான் முன்பும் நடந்தது. 1951இல், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டு தான் இந்தியாவில் தேர்தல் முறை அறிமுகமானது.
முன்பு இந்தியாவில் பின்பற்றப்பட்ட 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறை
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல்கள் அக்டோபர் 25, 1951 மற்றும் பிப்ரவரி 21, 1952 இடையே 100 நாட்களுக்கு மேல் நடத்தப்பட்டன. மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதாலும், சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும், ஒரே நேர்தத்தில் தேர்தல் நடத்தும் இந்த அமைப்பு சிதைந்தது. ஆயினும்கூட, 1957இல் 76% மாநிலங்களிலும், 1962 மற்றும் 1967இல் 67% மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1972க்கு பிறகு, பொதுத் தேர்தலுடன் எந்த மாநிலத் தேர்தலும் ஒத்துப் போகாததால், ஒரே நேர தேர்தல் என்ற போக்கு உடைந்தது. எனவே, மாநில சட்டசபைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையும் நடைமுறையும் இந்தியாவின் விஷயத்தில் புதிதல்ல. ஆனால், இதில் சவால்கள் ஏராளம்.