
ரூ.1,000 கோடி மதிப்பில் ராமேஸ்வரம்-கொச்சி NHக்கு புதிய பைபாஸ் வரப்போகுது
செய்தி முன்னோட்டம்
ரூ.1,000 கோடி மதிப்பில் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
ராமேஸ்வரத்திலிருந்து கொச்சி வரை செல்லும் இந்நெடுஞ்சாலை மதுரை வழியாக செல்கிறது.
இதில், மதுரை-ராமநாதபுரம் மற்றும் மதுரை-தேனி சந்திப்புகளில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இச்சாலைகள் உருவாக்கப்பட்ட காலத்தில் ஊராட்சிகளாக இருந்த பகுதிகள் தற்போது நகராட்சிகளாக மாற்றம் பெற்று, போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கின்றன.
இந்த நெரிசலைக் குறைக்க, நெடுஞ்சாலைத்துறை தற்போது மூன்று நிலையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:
- பழைய பைபாஸ் சாலைகளின் விரிவாக்கம்
- புதிய பைபாஸ் சாலைகள் அமைத்தல்
- ஊர்நகரங்களுக்கு நுழையாமல் செல்லும் புறவழிச் சாலைகள் கட்டமைத்தல்
மதுரை
மதுரையில் புறவழி சாலை அமைக்க திட்டம்
மதுரை மாவட்டத்தில், நாகமலை புதுக்கோட்டை முதல் முடக்குச்சாலை சந்திப்பு வரை, பாலம் மற்றும் புறவழிச் சாலை கட்டுவதற்கான பணிகள் தற்போது ரூ.260 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
மேலும், உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் ஊருக்குள் செல்லாமல், வாகனங்கள் நேரடியாக பயணிக்க புதிய மாற்றுச் சாலை அமைக்கப்படும்.
இதற்கான திட்ட அறிக்கை தற்போது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "தேனியைத் தவிர்த்து, பயணிகள் நேரடியாக கொச்சி செல்லும் வகையில் புதிய பைபாஸ் சாலை அமைக்கப்படும். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை பாதிக்காமல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும். பத்து ஆண்டுகளுக்குள், தமிழக எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்" என்றனர்.