ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி?
ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கம் அக்டோபர் 15ஆம் தேதி பதவியேற்கும் என்று பஞ்ச்குலாவின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க் தெரிவித்தார். விழா பஞ்ச்குலாவில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியம் அல்லது பரேட் கிரவுண்ட் செக்டார்-5ல் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர பாஜக தலைவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய யாஷ் கார்க் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மார்ச் மாதம் மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக முதலமைச்சராகப் பதவியேற்ற நயாப் சிங் சைனி, கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் முதல்வராக இருப்பார் என ஏற்கனவே பாஜக அறிவித்திருந்தது.
மீண்டும் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்பு
இந்நிலையில், அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கட்சித் தலைமை புதிய மாநில அமைச்சரவை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஹரியானாவில் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், முதல்வர் உட்பட மொத்தம் 14 அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2019ல் ஹரியானா சட்டசபை தேர்தலில், 40 இடங்களை பெற்றிருந்த பாஜக, இந்தமுறை 48 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 31 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. இந்திய தேசிய லோக்தளம் மற்றும் மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இந்த சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.