அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
கடந்த வாரம் முழுவதும் வெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் எதுவும் இயங்கவில்லை. இதனையடுத்து, தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகளை ஒத்திவைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. முதலில், டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருந்தது. அதன் பின், புயல், வெள்ளம் காரணமாக அந்த தேர்வுகள் டிசம்பர் 11 தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த கூட்டம்
எனினும், இன்னும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கம் இருப்பதாலும், மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் உடமைகள் வெள்ளத்தில் சேதமடைந்ததாலும், அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, வெள்ளம் காரணமாக அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.